சென்னையில் இசைவிழா களைகொள்கிறது. சில சபாக்களில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுடன் சில கச்சேரிகள் சில தினங்கள் ஒத்திவைக்கப்பட்டு தொடர்கின்றன.

இசைவிழா காலத்தின்போதுதான் எம். ஜி. ஆரும் மறைந்தார். அப்போதும் சில தினங்கள் இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகள் பின்னர் தொடர்ந்தன. அப்போது சுப்புடு எழுதிய விமர்சனம் ஒன்று எப்போதும் நினைவில் வரும். `எம். ஜி. ஆர். மறைந்த கவலை சோமுவுக்குத்தான் தீரவில்லை.’ பின்னர் நிகழ்ந்த மதுரை சோமுவின் கச்சேரியை இப்படி விமர்சித்திருந்தார் சுப்புடு. இப்படி, எத்தனை `சங்கதிகள்’.

முன்னரெல்லாம் மார்கழியில் சென்னை இசைவிழாவுக்குச் செல்வதென்பது, லண்டனில் ஒருவித `அந்தஸ்து’ வெளிப்பாடுபோலவுமிருந்தது. டிசம்பர் விடுமுறை காலமாதலால், விமான கட்டணங்கள் மிக உச்சமாகவிருக்கும். இதனால், உண்மையிலேயே ஆசையும், ரசனையும், ஆர்வமுமிருக்கும் பலருக்கு அது சாத்தியமாவதில்லை.

பின்னர், தீபாவளியையடுத்து தொடங்கும் கந்தஷஷ்டியின்போது திருச்செந்தூர் செல்வதும் இதனோடு இவ்வகையாக இணைந்துகொண்டது.

இப்போது, `முள்ளிவாய்க்காலு’க்குப் பின்னர் இலங்கைப் பயணம் சுமுகமடைந்ததில் நல்லூர் திருவிழாவும் சற்று பரவலான அளவில் இதில் சேர்ந்திருக்கிறது.

டிசம்பரில் நத்தார் தினத்தையடுத்து விமான கட்டணம் சற்று குறைந்துவிடுவதால், சில சமயங்களில் சென்னை இசைவிழா அதன் பின்னர் சாத்தியமாவதுண்டு. அதனால், இம்முறையும் `நிராசை’ என்று இன்னமும் தீர்ப்புச் சொல்லிவிடமுடியாது. ஆனால், இவற்றில் இம்முறை எதிர்பாராமல் ஏற்பட்டது நல்லூர் தரிசனம்.

இப்போது சில ஆண்டுகளாக தேர் உற்சவத்தன்று இந்திய தூதரகத்தின் அநுசரணையுடனான இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது வழக்காவதும் மகிழ்ச்சியாயிருந்தபோது, அதனையும் காணும் வாய்ப்பும் இதில் கூடவே கிட்டியது. ராதிகா சுரஜித்தும் மாணவியரும் வந்திருந்தார்கள்.

விஜய் தொலைக்காட்சியின் `சுப்பர் சிங்கரு’ம், ஜெயா தொலைக்காட்சியின் `தக திமி தா’வும் கர்நாடக இசையையும் பரதநாட்டியத்தையும் ஜனரஞ்சக வெள்ளமாய், வரப்பெல்லாம் உடைத்து எங்குமே பரவச்செய்த சிறப்பைப் பெறுபவை.

ராதிகா சுரஜித், `தக திமி தா’வின் மூல சூத்திரதாரி. சாந்தா – தனஞ்சயனின் சிரேஷ்ட மாணவி. நல்ல நடன நெறியாளுநர். சினிமாவில் ஏ. ஆர். ரஹ்மான், இளையராஜா முதலானோரின் இசை அமைப்புக்களில் விருதுகள்பெற்ற பல பாடல்களுக்கான நடன அமைப்பைச் செய்தவர்.

தன்னுடைய மாணவியர் சிலருடன் ராதிகா யாழ்ப்பாணம் வந்திருந்தார். இசைக் கலைஞர்கள் இல்லை; ஒலிப்பதிவு இசைதான்.

நீதிபதி இளஞ்செழியன் உள்பட, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் சிலருடன், சங்கிலியன் பூங்கா மைதானம் நிரம்பியிருந்தது. ராதிகா சுரஜித்தின் மாணவியரைத் தொடர்ந்து, வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் வவுனியா நிருத்திய நிகேதன நடனப்பள்ளி மாணவியரின் நடனமும் இடம்பெற்றது.

இசையில் நடனத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான உறவும் அபிமானமும் பரஸ்பரம் பேருன்னதமானது. இலங்கை வரும் இந்திய கலைஞர்களில் ஒரு வளமான கலை ரசனையையும், கலை நுணுக்கத்தையும் எதிர்பார்த்து, அநுபவித்துக் காண்பவர்கள் இலங்கை மக்கள். ஆனால், ராதிகா சுரஜித் இதில் சற்று வேறுபட்ட ஓர் உணர்வையே தோற்றுவித்தார்.

ஒன்பது மாணவியருடன் வந்த அவர், ஒரு தனித்த ஆடல் கலைஞர் அளிக்கவல்ல நிகழ்ச்சிகளைத்தான் அவர்கள்மூலம் அளித்தார். தனித்த கலைஞரானாலுங்கூட, அக் கலைஞரின் தனித்த ஆளுமை அரங்கை ஆட்கொள்ளுமல்லவா?

தொலைக்காட்சியில் ஒரு புரட்சியாகவே பரதக் கலையை இவ்வளவுதூரம் ஜனரஞ்சகப்படுத்திய நெறியாளுநர் ராதிகாவின் அன்றைய உருப்படிகளின் தேர்வும், உடைத் தேர்வும் ஏன் அப்படி?

மாலைப் பொழுதின் சித்தரிப்பில் இரண்டு உருப்படிகள். அந்த ஆடை வண்ணங்களும் மாலைப்பொழுதுக்கானவையா?

கிழவனாக வள்ளியின் கரம்பற்றும் முருகனின் சித்தரிப்பு இரண்டு உருப்படிகளில் வந்தது.

மோகினி ஆட்டத்தை நிகர்த்த உடையுடன் தில்லானா. முதலிலோர் உருப்படியெதனையும் அர்கள் அந்த உடையில் ஆடியுமிருக்கவில்லை; தில்லானாவுக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

தொடக்க நிகழ்ச்சியில் பூமாலைகளைக் கரங்களில் ஏந்திவந்து அசைவுகளுடன் ஆடி, ஆடும் அரங்கில் அவற்றைக் கீழே வைத்துவிட்டு, ஆடல் முடிவில் அவற்றை மீண்டும் எடுத்து கரங்களில் ஏந்திச் செல்வது ராதிகா சுரஜித்தின் நிகழ்ச்சிகளில் பொதுவாக வழக்காகிறது; புரிந்துகொள்ள இயல்வதில்லை. அரங்கத்துக்கு, பூமித் தாய்க்கு அர்ப்பணம் என்று யாரோ விளக்கம் சொன்னார்கள்.

இந்த வெளிப்பாடு உண்மையிலேயே அப்படி ஆகுமா? மாலை சூட்டுவதைவிட, பூக்கொண்டு அர்ச்சித்தால் சற்று அர்த்தமாகலாம்போலிருக்கிறது. நிலத்தில் வீழ்ந்த பூ `நிருமாலியம்’ அல்லவா, அதனைப் பின்னர் எடுத்து, ஏந்தி ஆடிச் செல்கிறார்கள்.

தொலைக்காட்சி, சினிமாவில் ராதிகா சுரஜித் வெளிப்படுத்தும் ஜனரஞ்சன ஆளுமையின் பக்கவிளைவு என்று தோற்றுகிறது.

இப்படி, மனதில் இந்த விசனங்கள் நிறைந்தபோது, தொடர்ந்து வந்த அந்த வவுனியா நிருத்திய நிகேதன மாணவியரின் நிகழ்ச்சி பெரு நிறைவைத் தந்தது.

சிவரஞ்சனியில் ஒரு வர்ணம். அபார வேகத்தில் சிறுமி ஒருத்தி வெளிப்படுத்தும் கரணங்கள்; அவை சுவர்ணமுகியிலிருந்து பத்மா சுப்ரமண்யத்துக்கு மாறவேண்டும் என்பது ஆசை.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் பார்த்த யாழ்ப்பாணத்து ஆடல் அரங்கு. பண்பாட்டு திணைக்களத்தின் இந் நடன ஏற்பாட்டுக்கு அநுசரணையாகவிருந்த கலைஞர் வேல். ஆனந்தன் தெரிவித்த சேதி, இந்த மூன்று தசாப்த காலத்து இன்னல்களின் எழுச்சியையும் கூடவே இந் நடனம் தன்னில் வெளிப்படுத்துவதை உணர்த்தியபோது, அது ஒரு கணம் துணுக்குறவே வைத்தது. யுத்தத்தில் பெற்றோரை இழந்து, வவுனியா, கோவிற்குளம் `அகிலாண்டேஸ்வரி’ காப்பகத்தில் வதியும் சிறுமியர் இவர்கள். சூரியயாழினி வீரசிங்கத்தின் மாணவிகளான இவர்கள், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் நடன கற்கையைத் தொடர்கிறார்கள்.

ஆறி, கலைகளில் ஊறிச் சிறந்த யாழ்ப்பாணத்தில் அக் கலைகள் இப்போது மீண்டும் மிடுக்குறுகின்றன.

விருந்தினர்களைக் கௌரவிப்பது வாஷ்தவம்தான். இந்த பாரம்பரியம், யாழ்ப்பாணத்து கலை அரங்குக்கு நன்றாகவே பரிச்சயமானது. ஆனாலும், விருந்தினராக யாழ்ப்பாணம் வந்த அந்த நடன மாணவிகளுடன் இவர்களுக்கும்கூட இந்திய தூதரகம் ஒரு நினைவுச் சான்றை வழங்கியிருக்கலாம். யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்துக்கு இவர்களும் விருந்தினர்கள்தானே. எப்படியோ, பார்ப்பதற்கும் அரங்கில் இது ஒருமாதிரியாகவே இருந்தது. இந்திய கலைஞர்களோடு இவர்களையும் இணைத்த நல்லெண்ண நல்லுறவில் இது நிச்சயமாக நினையாமல் நேர்ந்ததாகவே இருக்கும்.

மறுநாள் இவர்களுடைய நிகழ்ச்சி நெடுந்தீவில் நடைபெற்றது. நெடுந்தீவில் நடைபெறும் முதலாவது இந்திய நடன கலைஞர்களின் நிகழ்ச்சி என்று துணைத்தூதர் ஏ. நடராஜன் குறிப்பிட்டார்; உண்மையாகலாம். நெடுந்தீவு பெருமையுறும் தனிநாயக அடிகளார் திறந்த வெளியரங்குக்கு அருகே அமைந்த அழகான மண்டபம். மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. இங்கு, முழுக்க முழுக்க சினிமா பாடல்களுக்கான நிகழ்ச்சியை ராதிகாவின் மாணவிகள் அளித்தார்கள். நன்கு தேர்ந்தெடுத்த பாடல்களுடன் மிக ரம்மியமான நிகழ்ச்சி.

ஆனால், நிகழ்ச்சி முடிந்து வெளியே வருகையில் காதில் வீழ்ந்தவை வியப்பையூட்டின. இந்த சினிமாபாடல் நிகழ்ச்சி பலருக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அங்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு ராதிகா சுரஜித் நிச்சயமாக ஜவாப்தாரி அல்லர். ஒரு நிகழ்ச்சியை முழுக்க முழுக்க இப்படி சினிமா பாடல்களுடன் அமைக்க அமைப்பாளர்களுடன் தீர்மானமாகியிருக்கலாம். ஆனால், நெடுந்தீவில் அந்த மக்கள் இந்திய நடன கலைஞர் ராதிகாவிடம் எதிர்பார்த்தது அதுவல்ல.

ஆக, சென்னை `சீசனில்’ மனம் இதனையும் அசை மீட்டுகிறது.

– மாலி