சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடற்படை முகம் 60 ஏக்கர் பரப்பளவைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பு எல்லைப்பரப்பு குறைக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டதன் மூலம் முசலி பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் காணிகள் பல சுவீகரிப்பட்டன. இந்நிலையில், இந்த முகாமைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளை இன்று அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவேளை, கடற்படை முகாமை அகற்றுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பல தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இறுதியாக அமைச்சரின் வேண்கோளுக்கிணங்க தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி பிரதமரிடம் வாய்மூல கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றல் தொடர்பில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.

இதற்கிணங்க, சல்மான் எம்.பி. மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஆகியோர் சிலாவத்துறைக்கு விஜயம் செய்து, கடற்படை முகாமினால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள காணிகளின் விபரங்களை திரட்டுவதற்காக குழுவொன்றை அமைத்திருந்தனர்.

இந்தக் குழுவினால் திரட்டப்பட்ட ஆவணங்கள், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வில்பத்து பிரதேசத்துக்கு சென்றபோது முசலி பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்த ஆவணங்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கையளித்து இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

உடனே, கடற்படை தளபதியை தொடர்புகொண்ட ஜனாதிபதி, குறித்த சிலாவத்துறை கடற்டை முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று வியாழக்கிழமை, 60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை பாதுகாப்பு முகாமின் எல்லைகளை சுருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்‌பிரகாரம் பாதுகாப்பு எல்லையின் நடப்பட்ட தூண்கள் கழற்றப்பட்டு பாதுகாப்பு எல்லைப் பிரதேசம் சுருக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த முகாமை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல தடவைகள் குரல்கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.