ஆண்ட்ராய்டு நிறுவனரின் புதிய ஸ்மார்ட்போன்: மே 30-ந்தேதி வெளியாகிறது

3474

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இணை நிறுவனரான ஆண்டி ரூபின் தனது புதிய ஸ்மார்ட்போனினை மே 30-ந்தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் இணை நிறுவனரான ஆண்டி ரூபினின் எசென்ஷியல் பிராடக்ட்ஸ் இன்க் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனினை மே 30-ந்தேதி வெளியிட உள்ளதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எசென்ஷியல் ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், ”எங்களது ட்விட்டர் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். மே 30-ந்தேதி மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகிறது, தொடர்ந்து இணைந்திருங்கள்..” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் அந்நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. புகைப்படத்தில் ஸ்மார்ட்போன் நிழல் காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மேல் கூடுதல் சாதனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது, எனினும் இந்த சாதனம் 360 டிகிரி கேமராவாக இருக்கும் என கூறப்படுகிறது.
எசென்ஷியல் பிராடக்ட்ஸ் நிறுவன ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது அதன் பெசல் லெஸ் வடிவமைப்பு. முன்னதாக ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான எரிக் ஸ்கிமிட் இந்த சாதனம் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார், எனினும் சரியான தேதியை குறிப்பிடவில்லை. சமீபத்தில் ரூபின் இந்த ஸ்மார்ட்போனின் டீசர் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
டீசர் புகைப்படத்தில் இந்த ஸ்மார்ட்போன் பார்க்க சியோமி எம்.ஐ. மிக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. இதிலும் முன்பக்க பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் 2017-ம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் மாட்யூலர் சாதனமாக இருக்கலாம் என்றும், இவை காந்தம் கொண்ட கனெக்டர் மூலம் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கனெக்டர் பேட்டரியை சார்ஜ் செய்வதோடு, பல்வேறு இதர அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான மாட்யூல்களில் ஒன்றாக 360 டிகிரி கேமரா இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.