கூகுளாலேயே இது முடியாதாம்!

3485

பிரௌசரில் தப்பா டைப் பண்ணினாலும் அதற்கு ஒரு ரிசல்ட் காட்டுவதுதான் கூகுளின் ஸ்டைல். கடவுளிடம் கிடைக்காததுகூட கூகுளிடம் கிடைக்கும். அப்படிப்பட்ட கூகுளே ஒரு விஷயத்தில் கைவிரித்துவிட்டது. ஆம்! தன் ஊழியர்களின் சம்பள லிஸ்ட்டை தங்களால் வெளியிட முடியாது; அதற்கு நிறைய கால அவகாசமும், பணமும் செலவாகும் என்று ஒரு வழக்கிலிருந்து அப்ஸ்காண்டு ஆகிவிட்டது கூகுள்.

கூகுள் நிறுவனம், சிலிக்கான் வேலி எனும் பகுதியில் அமைந்திருக்கிறது. சமீப காலமாக சிலிக்கான் வேலியின் பெண்/ஆண் ஊழியர்களுக்கு இடையில் சம்பளப் பாகுபாடு இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ‘லேபர் டிபார்ட்மென்ட்’ எனும் கவர்ன்மென்ட் அமைப்பு, கூகுளின்மேல் ஒரு சமூகநல வழக்கு தொடர்ந்தது. ‘‘கூகுள் பெண் ஊழியர்களைப் பாரபட்சமாக நடத்துவதாக எங்களுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. ஆண் ஊழியர்களுக்கும் பெண் ஊழியர்களுக்கும் கூகுளில் நிறைய வேற்றுமைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு. எனவே, கூகுள் தன்னுடைய ஊழியர்களின் சம்பள லிஸ்ட்டை வெளியிட வேண்டும்’’ என்றது.

இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்துக்கு வந்தது. ‘‘எங்கள் நிறுவனத்தில் பெண்/ஆண் என்கிற வேறுபாடுகள் சம்பள விஷயத்தில் கிடையாது. சிலருக்கு அவர்களின் வேலை அடிப்படையில் வேண்டுமானால் ஊழியப் பணத்தில் வித்தியாசம் வரலாம். ஏற்கெனவே லேபர் டிபார்ட்மென்ட் கேட்டுக்கொண்டபடி ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளோம். அது, போதவில்லை என்கிறார்கள். எங்களின் முழுமையான ஊழியர் சம்பளப் பட்டியலை வெளியிட 500 மணி நேரமும் 1 லட்சம் டாலரும் செலவழியும். இப்போதைக்கு அது எங்களால் இயலாது!’’ என்று ‘நோ ரிசல்ட்’ போர்டு மாட்டிவிட்டது கூகுள்.