ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று கருடனுக்கு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் நாக தோஷம் நீங்கும்.

மகா விஷ்ணுவின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன். விஷ்ணு தலங்கள் மூலவருக்கு எதிரில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பார். பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார். பெருமாள் கோவில்களில் நடைபெறும் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும் பெருமாள் கருடன் மீது அமர்ந்துதான் திருவீதி உலா வருவார்.

கருடாழ்வார் மீது அமர்ந்தபடி பெருமாள் வீதி உலா வருவதில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. ‘கோவிலுக்கு வர இயலாத பக்தர்களுக்கு, அவர்கள் இல்லம் நாடி அருள்புரிய இறைவன் வருகிறான்’ என்பது தான் அந்த தத்துவம்.

கருட தரிசனம், சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

கருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர்களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர்.

கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.

விரதம் இருப்பது எப்படி?

கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.

சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.

நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி அதன் மேல் நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தில் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாக தோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.