பழைய மாதிரி டோனியும், யவராஜ் சிங்கும் இனிமேல் அதே அளவிலான சிறந்த பினிஷர் கிடையாது என்று அசாருதீன் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா நாளைமறுநாள் (4-ந்தேதி) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் யுவராஜ் சிங் மற்றும் டோனி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இருவரும் சிறப்பாக விளையாடினால் இந்தியா கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.

ஆனால், டோனி மற்றும் யுவராஜ் சிங்கால் பழைய மாதிரி போட்டியை சிறப்பாக முடித்து வைக்க இயலுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பழைய மாதிரி டோனி மற்றும் யுவராஜ் சிங்கால் இனிமேல் போட்டியை பினிஷ் செய்ய இயலாது என்று முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொகமது அசாருதீன் கூறுகையில் ‘‘டோனி மற்றும் யுவராஜ் சிங்கால் பழைய மாதிரி இனிமேல் போட்டியை சாதகமாக முடிக்க முடியாது. அவர்கள் 14 முதல் 15 வருடங்களாக கிரிகெட் விளையாடி வருகிறார்கள். அப்படி விளையாடும்போது தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியாது.

யுவராஜ் சிங்கின் ஆட்டம் இங்கிலாந்து மண்ணில் உகந்ததாக இருக்காது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக சதம் அடித்தபின்னர், அவரது ஆட்டம் சிறந்ததாக அமையவில்லை’’ என்றார்.

யுவராஜ் சிங் 17 வருடத்திற்கு முன் இதே தொடரில்தான் கென்யாவிற்கு எதிராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.