அரியலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சச்சின் (வயது28). எம்.ஏ. படித்து வரும் இவர், உயர்ரக செல்போன் வைத்திருந்தார். நேற்று திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் குணசேகரன் என்பவருடைய வீட்டுக்கு சச்சின் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருவாரூர்- தஞ்சை சாலையில் முகந்தனூர் என்ற இடத்தில் சென்றபோது அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது.

இதனால் அவர் மோட்டார்சைக்கிளை சாலையின் ஓரத்தில் நிறுத்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதில் சச்சினின் முகம், தாடை, கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சச்சின் வைத்திருந்தது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகும். அந்த செல்போன் எப்படி வெடித்து சிதறியது என உடனடியாக தெரியவில்லை. செல்போன் வெடித்து சிதறி வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.