பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 3-வது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால் எளிதில் வெற்றி பெற்றார். இரட்டையரில் லியாண்டர் பெயசுக்கு இரட்டை தோல்வி ஏற்பட்டது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் 9 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) சந்தித்தார். ஷாட்டுகளிலும், சர்வீஸ்களிலும் அதிரடி காட்டிய நடால் ஒரு கேம் மட்டுமே விட்டுக்கொடுத்து எதிராளியை கலங்கடித்தார். முடிவில் நடால் 6-0, 6-1, 6-0 என்ற நேர் செட்டில் பாசிலாஷ்விலியை துவம்சம் செய்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-7, 6-3, 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்மானை வீழ்த்தினார்.டொமினிக் திம் (ஆஸ்திரியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்) ஆகியோரும் 4-வது சுற்றை எட்டினர்.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், சுவிட்சர்லாந்து மங்கை மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இவர்களை 4-6, 6-1 (2-10) என்ற செட் கணக்கில் கேத்ரினா ஸ்ரீபோட்னிக் (சுலோவேனியா)- கிளாசென் (தென்ஆப்பிரிக்கா) இணை வென்றது. ஆண்கள் இரட்டையரிலும் லியாண்டர் பெயசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கியும் கைகோர்த்து 2-வது சுற்றில் 6-7 (3), 2-6 என்ற நேர் செட்டில் டேவிட் மாரெரோ- டாமி ராபிரிடோ (ஸ்பெயின்) கூட்டணியிடம் வீழ்ந்தனர்.

அதே சமயம் ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி 5-7, 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் டிரிட் ஹூய் (பிலிப்பைன்ஸ்)- டெனிஸ் இஸ்தோமின் (உஸ்பெகிஸ்தான்) இணையை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

இதே போல் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் ஜூராக்-பவிச் (குரோஷியா) இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.