விடுதலைப் புலிகள் உடையில் இருந்தீர்களா? வைகோவிடம் விசாரணை

1749

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள நான் சென்ற போது எனக்கு மலேசியா அரசு தடை விதித்தது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலேசியாவில் நடந்த சம்பவம் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவமாக நான் கருதுகிறேன்.

2014-ம் ஆண்டு மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த உலக தமிழர் மாநாட்டில் சிங்கள அரசை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க தீர்மானம் பிரகடனம் செய்தோம். அதில் சிறப்பு அழைப்பாளர்களாக நான் கலந்து கொண்டு பேசினேன்.

மலேசிய விமான நிலையத்தில் என்னை மலேசியாவிற்குள் செல்ல அனுமதி மறுத்து என்னிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டனர். அது தொடர்பாக 8 மணி நேரம் விளக்கம் கொடுத்தேன்.

அப்போது அவர்கள் விடுதலைப் புலிகள் உடையில் இருந்தீர்களா என்று கேட்டதற்கு இலங்கை இராணுவ தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப் புலிகள் உடையில் இருந்ததாக விளக்கம் கூறினேன். ஆனால் என்னுடைய விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை.

மலேசியாவில் எனக்கு நேர்ந்தது பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன்.

மலேசியாவில் உள்ள இந்திய தூதர் இதுபற்றி என்னிடம் கவலை தெரிவித்தார்.

முன்னதாக அவர் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

இந்த திருமண விழாவில் நான் பங்கேற்றதற்கு மலேசியா அரசுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள நான் சென்ற போது எனக்கு மலேசியா அரசு தடை விதித்தது.

என்னிடம் அவர்கள் நீங்கள் இலங்கையை சேர்ந்தவரா? என்றார்கள். நான் இல்லை என்றேன். உங்கள் மீது வழக்கு உள்ளதா என்றார்கள்? அதற்கு இலங்கை மற்றும் மலேசியாவில் என் மீது வழக்கு இல்லை என்றேன்.

அனுமதி மறுக்கப்பட்ட விவரத்தை துணை முதல்வர் ராமசாமியிடம் கூறினேன். அதற்கு அவர் முதல்வரிடம் இதுபற்றி பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த வேளையில் என்னை ஒரு தனி நாற்காலியில் அமர வைத்தனர். சாப்பிட செல்வதற்கு கூட அனுமதிக்க கூடவில்லை. தண்ணீர் கூட பருக மறுத்து விட்டேன். தொடர்ந்து 16 மணி நேரம் அங்கே அமர்ந்திருந்தேன்.

விமானத்திற்கு அழைத்து செல்லும் போது கூட பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை என்னிடம் தரவில்லை. தமிழர்களுக்காக எத்தகைய சூழலையும் நாங்கள் எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.