தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அனைத்தும் மாறிவிட்டதாக ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனித்துக் கொள்வதற்காக 30 நாட்கள் பரோல் வழங்குமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறைத்துறை நிர்வாகத்தினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மகன் பேரறிவாளனுக்கு பரோல் வழங்காதமை அதிர்ச்சியளிப்பதாக தயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் மத்திய சட்ட்டங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு தண்டனை நிறுத்த சட்டத்தின் பிரகாரம் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று வேலூர் மாவட்ட சிறைத்துறைத் துணைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உத்தரவிற்கு எதிராக தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அனுப்பிய மேன்முறையீட்டு மனு இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.