ஜெயலலிதாவுக்கு விஷ ஊசி போடப்பட்டதா? அப்பலோ மர்மம்

1732

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் தீராத நிலையில், அவரது உடலைச் சுற்றி மன்னார்குடி வகையறாக்கள் அணிவகுத்து நின்றதைப் பார்த்து உள்ளுக்குள் கொதித்துப் போயினர் அ.தி.மு.க.வினர்.

அதன்பின், தஞ்சையில் நடந்த விழாவில், “”அ.தி.மு.க.வை இந்நாள் வரை காப்பாற்றியது எங்கள் குடும்பம்தான். இனி தமிழகத்தில் எங்களது குடும்ப ஆட்சிதான் நடக்கும். எங்கள் குடும்பத்தை பா.ஜ.க.வை பின்புலமாக வைத்து ஒரு சிலர் எதிர்க்கிறார்கள். அவர்கள் காணாமல் போவார்கள்” என சசிகலாவின் கணவர் எம்.நடராஜனும் சசிகலாவின் தம்பி திவாகரனும் திருவாய் மலர்ந்தனர்.

நடராஜனின் இந்த பேட்டியை எதிர்த்து கே.பி.முனுசாமி குரல் கொடுத்ததால் ஓ.பி.எஸ். பிரிந்து வந்தார். சசிகலா குடும்பத்துக்கெதிரான தாக்குதலை மத்திய பா.ஜ.க. அரசு தீவிரப்படுத்தியது. சசிகலா ஜெயிலுக்குப் போனார். அ.தி.மு.க. மூன்று துண்டுகளாக உடைந்தது.

“தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பது மாதிரி மந்திரி ஜெயக்குமார் தொடங்கி காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் வரை சசிகலாவையும் அவரது குடும்பத்தாரையும் எதிர்த்துப் பேசுகிற அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறிப் போனது.

அதற்குப் பிறகு சசிகலாவின் தம்பி “பாஸ்’ என அழைக்கப்படும் திவாகரன் வாய் திறக்கவேயில்லை. நடராஜனும் உடல்நிலை குன்றிப் போனார். தற்பொழுது உடல்நிலை தேறி வந்திருக்கும் நடராஜன் மறுபடியும் வாய் திறந்துள்ளார். தமிழ் மற்றும் தேசிய மீடியாக்களுக்கு பேட்டியளித்த நடராஜன் ஜெயலலிதாவைப் பற்றி விமர்சித்துள்ளார்.

எம்.ஜி.ஆரை விட ஜெ.வுக்கு மிக அதிகமான சந்தேக புத்தி இருந்தது. ஜெயலலிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என ஒருவர் ஏமாற்றினார். தனது அண்ணன் அண்ணியும் கூடத் தன்னை ஏமாற்றியதாக ஜெயலலிதா கூறினார். இப்படி பல பேரால் சொந்த வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு சந்தேகப் புத்தி அதிகமாகிவிட்டது.

89-ம் ஆண்டுக்கு முன்பு எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் இடையே போராட்டம் நடந்தது. அப்பொழுதெல்லாம் இந்த நடராஜனிடம் அரசியல் சூழ்நிலையை கைப்பட எழுதி அனுப்பி ஆலோசனை கேட்ட ஜெயலலிதா அவர் ஆட்சிக்கு வந்ததும், நான் எனது பத்திரிகை சந்தாவை அதிகப்படுத்த நடத்திய கூட்டங்களையும், அதில் கூடிய கூட்டங்களையும் பார்த்து சந்தேகப்பட்டார்.

91-ம் ஆண்டு அன்றிருந்த உளவுத்துறை அதிகாரி பஞ்சாபிகேசன் சொன்ன தகவல்கள் அடிப்படையில் என் மீது சந்தேகம் அதிகமானது. நான் யாருடனும் பேசக்கூடாது என ஜெயலலிதா உத்தரவிட்டார். “நான் சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவன்; என்னால் உங்களுக்கு அடிமையாக இருக்க முடியாது’ என சொல்லிவிட்டு கார்டனிலிருந்து வெளியே வந்தேன்.

91-ல் பஞ்சாபிகேசன் சொன்னது போல, 2011-ல் போலீஸ் அதிகாரி ராமானுஜம் ஒரு சவ வீட்டில் எங்கள் சொந்த பந்தங்கள் ஒன்று சேர்ந்ததை பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் சொன்னார். அதை உண்மை என நம்பிய ஜெயலலிதா எங்கள் குடும்பத்தினரை வெளியேற்றினார்.

அதன்பின், ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெறும் போதுதான் எங்களது குடும்பம் அவரை பார்த்தது. அப்பல்லோவில் சிகிச்சை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார். இந்த நடராஜன், திவாகரன் ஆகிய இரண்டு பேரை தவிர சசிகலா குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்தார் ஜெயலலிதா

ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது நல்ல உடைகளை அணிந்திருக்க முடியாது. எனவேதான் ஜெயலலிதா அமித்ஷாவையும் அருண்ஜெட்லியையும் சந்திக்கவில்லை. தற்பொழுது ஓ.பி.எஸ். அணியினர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்து விட்டதாக கூறுகிறார்கள். அது பொய்.

நாங்கள் மெல்ல கொல்லும் விஷ ஊசி போட்டோம் என்று முன்பு சொன்னார்கள். அதெல்லாம் பொய் என ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் நிரூபித்தன” என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் நடராஜன்.

கடந்த முறை பேசியது மாதிரி பா.ஜ.க.வைப் பற்றி பேசுவதைத் தவிர்த்த நடராஜன், இம்முறை, பத்திரிகையாளர் சோ ஒரு ஊழல்வாதி. அவர் சசிகலாவைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவுக்கு சொல்லி பணம் சம்பாதித்தார்” என குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதாவுக்கும் நரேந்திர மோடிக்கும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பரான மறைந்த சோவைப் பற்றி நடராஜன் குறிப்பிட்ட செய்தி பா.ஜ.க. வட்டாரங்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க. தலைவர்கள், நடராஜன் பேசிய பேச்சு தேவையற்ற விளைவுகளை உருவாக்கியுள்ளன. அரசியலில் இருந்து சசிகலா குடும்பத்தினரை விலக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றிய தெளிவான விசாரணை வேண்டும் என்பது ஓ.பி.எஸ். தரப்பின் கோரிக்கை மட்டுமல்ல, அந்த கோரிக்கையை ஓ.பி.எஸ். தரப்பின் மூலம் வெளிப்படுத்தச் செய்ததே பா.ஜ.க.தான்.

இப்பொழுது அந்த கோரிக்கை எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையாகவும் மாறிவிட்டது. அதனால்தான் சசிகலா, தினகரன் ஆகியோர் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும் என்கிற குரல் எடப்பாடி அணியின் குரலாக எதிரொலிக்கிறது. அதை பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது.

சமீபத்தில் பா.ஜ.க.வின் ஜனாதிபதி பதவி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் சென்னைக்கு வந்து முதலமைச்சர் எடப்பாடியின் தலைமையில் அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டார்.

அந்த விழாவில் சசிகலா, தினகரன் ஆகியோர் படம் இடம்பெறக்கூடாது என பா.ஜ.க. ஸ்டிரிக்டாக சொன்னது. அதை அப்படியே ஏற்றுக் கொண்ட எடப்பாடி, ஜெயலலிதா படம் அதைத் தொடர்ந்து மோடி, அதற்குப் பின் எடப்பாடியின் படம் மட்டுமே இடம் பெறும் வகையில் பார்த்துக் கொண்டார்.

ஜெ.வின் மரணத்தில் முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் அடுத்த கோரிக்கையை எடப்பாடி விரைவில் நிறைவேற்றுவார். நடராஜனின் பேச்சுக்கள் இதை வேகப்படுத்தியுள்ளன” என்றார்கள்.

பா.ஜ.க.வினர் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஜெ.வின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிற எம்.பி.க்களின் கோரிக்கை பற்றி மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தமிழக அரசுக்கு 28.04.2017 அன்று கடிதம் அனுப்பியுள்ளது.

டெல்லி இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது” என்கிறார் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி.யான மைத்ரேயன்.

இதுபற்றி தமிழக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதத்திற்கு தமிழக அரசு தரப்பிலிருந்து பதிலேதும் அளிக்கவில்லை. தமிழக அரசு மௌனமாக இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசு நடராஜனின் பேட்டியைத் தொடர்ந்து மறுபடியும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள் குறித்த விசாரணையில் தீவிரமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது” என்கிறார்கள்.

நடராஜனின் இந்தப் பேச்சு அ.தி.மு.க. அம்மா அணியான எடப்பாடி தரப்பிலும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஜெயலலிதாவை விமர்சித்து நடராஜன் குறிப்பிடுவது திமிர் பிடித்த பேச்சு. ஜெ. உயிருடன் இருந்தால் இப்படி நடராஜனால் பேச முடியுமா?

நடராஜனின் இந்த குணாதிசயம் சசிகலாவுக்குக் கூட பிடிக்காது. திவாகரன், தினகரன் ஆகியோரைச் சந்திக்க சம்மதித்த சசிகலா நடராஜனை இதுவரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, “நான் கைதியின் கணவர்’ என நடராஜன் பரப்பன அக்ரஹாராவுக்கு சென்றார். சசிகலா அவரை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

தற்பொழுது டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன்தான், அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்தவர். ஜெ.வுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் 24 மணி நேரமும் அப்பல்லோவில் இருந்த ராஜேந்திரனுக்கு ஜெ.வின் சிகிச்சை பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும்.

அத்துடன் போயஸ் கார்டனில் இருந்த ரொக்க பணம், சொத்து, தங்கம், வைரம் போன்றவற்றை சசிகலா வகையறாக்கள் கையாண்ட விவரமும் அவருக்கு தெரியும். அதனால்தான் டி.கே.ராஜேந்திரன் அனைத்து நடைமுறைகளையும் மீறி மீண்டும் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

எடப்பாடியின் இந்தத் தேர்வுக்கு சசிகலாவின் சம்மதமும் உண்டு’ என்கிறார்கள்.தன் சித்தப்பா நடராஜன் அதிரடியாகப் பேசுவதெல்லாம் மறைமுகமாக பா.ஜ.க.விற்கும் எடப்பாடிக்கும் உதவியாக இருக்கிறது என தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்ட டி.டி.வி.தினகரன், இதுபற்றி அடுத்த சில தினங்களில் சசிகலாவை சந்திக்கும் போது பேச திட்டமிட்டுள்ளாராம்.

தேவையில்லாமல் விஷ ஊசி குற்றச்சாட்டு பற்றியெல்லாம் நினைவுபடுத்துவதால், விரைவில் சசிகலாவிடமிருந்து நடராஜன் ஜெ.வைப் பற்றி பேசிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு காட்டமான அறிக்கை வரும் என்கிறார்கள் தினகரனுக்கு நெருக்கமானவர்கள்.

ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் மோடி அரசு, சசிகலா குடும்பத்தினரின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனிக்கிறது.