விடுதலைப் புலிகளை அழித்தவர்களின் கழுத்தில் சுருக்கு போட்டு இறுக்கும் நடவடிக்கைகளை இந்த அரசு ஆரம்பித்து விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

காணாமல் போதல்களை தடுப்பது குறித்த சர்வதேச பிரகடனம் தொடர்பிலான சட்டமூலமானது மிகவும் அபாயகரமான விடயமாகும்.

இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நாட்டில் வாழவும் கூட தகுதியற்றவர்களாவார்கள் என்பதனை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வீரத் தியாகங்கள் செய்து நாட்டில் யுத்தத்தை நிறைவு செய்து வைத்த இராணுவத்தினரை தண்டிப்பதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது.

இது நிறைவேற்றப்பட்டு விட்டால் குற்றவாளியாக கருதப்படுபவர் வைத்தியசாலையில் இருந்தாலும் சரி வேறு நாட்டில் இருந்தாலும் சரி கட்டாயம் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.

அந்த அளவிற்கு இந்த சட்டத்திற்கு அதிகாரம் உள்ளது. சுதந்திர மூச்சை சுவாசிக்க வைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட உள்ளனர்.

விடுதலைப் புலிகளை அழிக்க மிகப்பிரதானமாகச் செயற்பட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் இராணுவ வீரர்கள், புலனாய்வுத் துறை அதிகாரிகள் போன்றோரது பெயர்ப்பட்டியல் புலம்பெயர் தமிழர்களிடம் உள்ளது.

அதன் மூலம் அவர்கள் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்வார்கள். அப்படி செய்யும் போது இப்போது கொண்டு வரப்படும் சட்டம் மூலம் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

தீர்ப்பு அவர்களிடமே உள்ளது. இப்போதும் பல பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த சட்டமூலம் தேசவிரோதமான ஒரு விடயமாகும். இந்த சட்ட மூலத்தினை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவேண்டாம் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் விமல் தெரிவித்தார்.