பிரித்தானியாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் குறித்த உடன்படிக்கை வெகு விரைவில் கைச்சாத்திடப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் ஆரம்பமான ஜி – 20 உச்சிமாநாடு இன்றும் தொடரும் நிலையில், அதன் போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் விரைவில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்விரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் தொடர்பிலும் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், “நன்மையை ஏற்படுத்தக்கூடிய சிறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படும். அந்த ஒப்பந்தம் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு சாதகமாக அமையும்” என தெரிவித்தார்.

அத்துடன், மேயுடனான பேச்சுவார்த்தை சிறந்த வகையில் அமைந்தது எனவும் ட்ரம்ப் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைப் போல, ஜப்பானிய பிரதமருடனும் தெரேசா மே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.