போரின் போது சிறிலங்கா படையினர் மற்றும் தமிழ்ப் போராளிகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக அனைத்துலக சமூகத்துக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் ஐந்து நாட்கள் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தனது பயணத்தின் முடிவில், நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் உண்மையில் தேக்கநிலையிலேயே இருக்கின்றன.

நிலைமாறுகால நீதி கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக, சிறிலங்காவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உண்மையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானது அல்ல.

சிறிலங்கா ஆயுதப்படையைச் சேர்ந்தவர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டதற்கு எந்தச் சான்றும் இல்லை.

ஆயுதப் படைகளுக்குள்ளேயும், கூட்டு அரசாங்கத்துக்குள்ளேயும் இருக்கின்ற பிற்போக்கு சக்திகள் இதனை முடக்கி வைத்திருப்பதுடன்,  மீண்டும் இனமுரண்பாடு ஏற்படுவதற்கான அச்சுறுத்தலும் உள்ளது.

கூட்டு அரசாங்கத்தினதும், பாதுகாப்பு கட்டமைப்பினதும் செயல்முறைகளை  இந்த பிற்போக்கு சக்திகள் திசை திருப்பி விட அனுமதிக்காதீர்கள் என்பதே, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான எனது வேண்டுகோளாகும்.

போரின் போதும், போருக்குப் பின்னரும் ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள்  தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.