நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகள், பந்தாடுப்படுவது வழக்கம்தான். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அவரது 25 ஆண்டுகால பணிக்காலத்தில் 25 முறை பணிமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் சகாயத்தின் நிலைதான் கர்நாடகாவில் சசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய ரூபாவுக்கும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் சொகுசாக வாழ்வதாகவும் அதற்காக சிறைத்துறை டிஜிபிக்கு 2 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் ரூபா.

இதுதொடர்பாக கர்நாடக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டதால் ஊடகங்களில் வாய்திறக்காமல் இருக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ரூபா, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். இதையடுத்து சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா பெங்களூரு போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்டார்.

சசிகலா, முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்டோரிடம் நேருக்கு நேர் மோதியதால் ரூபாவுக்கு அதிகார மட்டத்தில் மட்டுமல்லாமல், வெளியில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

ரூபாவுக்கு எதிரான அதிகார புள்ளிகள் அவருக்கு எதிராக வலுவாக காய் ந‌கர்த்தின. சிறைக்குள் இருக்கும் சில கைதிகளைக் கொண்டு அங்கே கலகத்தை உருவாக்கி, சிறையை பதற்றமாக்கினர்.

அரசியல் வட்டாரமும் அதிகார மட்டமும் சட்ட விரோத கும்பலும் ஒரே நேரத்தில் கைகோர்த்ததால் ரூபா ஒரே மாதத்தில் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

காவல்துறையில் இவர் பணியில் சேர்ந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அரசியல்வாதிகள், பணக்காரர்கள், ரவுடிகள், அதிகாரிகள் என‌ எத்தனையோ எதிர்ப்புகளை பார்த்துவிட்டார். எதற்கும் அடிபணியாத ரூபாவுக்கு அதிகார வர்க்கம் அளிக்கும் தண்டனை, அடிக்கடி இடமாற்றம்.

கடந்த 17 ஆண்டுகளில் 31 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் ரூபா. இது தான் ரூபாவின் நேர்மைக்கு தரப்படும் மாபெரும் பரிசு என அவரது நெருங்கிய நண்பர்கள் வருத்தத்தோடு கூறுகிறார்கள்.