தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என உழவர் பாதுகாப்பு மாநாட்டுக்காக கும்பகோணம் வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாணவர்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றிபெற்றதற்கு காரணம், நம் முன்னோர்கள் விதைத்த விதைதான். போராட்டக் களத்தில் இறங்கிவிட்டால், அச்சமில்லாமல் போராட வேண்டும். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி-யை மூடமுடியாது என்று சொல்லுவதை ஏற்க முடியாது.

ஓ.என்.ஜி.சி வெளியேறாவிட்டால் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியாது. அரசு மதுக்கடைகளை மூட மறுக்கிறது, பெண்களும் பொதுமக்களும் மதுக்கடைகளுக்கு எதிராகத் தினம் தினம் போராடி வருகிறார்கள்.

அரசு தன்னுடைய அதிகாரத்தைப் பெரும் முதலாளிகளின் கையில் ஒப்படைத்துவிட்டது. மக்களுக்கான அதிகாரமாக மாற வேண்டும். அப்போதுதான் நாடு வளம்பெறும். காங்கிரஸ், பா.ஜ.க என மாறி மாறி மத்தியில் ஆட்சி செய்கிறார்கள். இவர்களால் தமிழகத்துக்கு என்ன பயன்.

நீலகிரி மாவட்டத்துக்கும், கேரள மாநிலத்துக்கும் இடையே அணைகள் கட்ட இந்திராகாந்தி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அணைகள் கட்டியிருந்தால் நாம் அண்டை மாநிலத்திடம் பிச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்குமா?

தமிழகத்தில் ஏரி, குளங்கள் தூர்ந்துபோய்விட்டது, நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விட்டது. ஏரி, குளங்களைத் தூர்வாருவதுடன் நீர்த்தேக்கங்களையும் அதிகளவில் உருவாக்க வேண்டும்.

தமிழகத்துக்கு 4 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வருகிறது, 1,500 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரைச் சேமித்தாலே தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீரும். குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் நீர் பங்கீட்டு முறை செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களிலும் நீர் பங்கீட்டு முறை இருந்தால் பிரச்னையே இருக்காது.