வடகொரிய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவைகளை விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடை விதித்தது.

இந்த புதிய பொருளாதார தடையினால் நிலக்கரி, இரும்பு, இரும்பு தாது, லெட், லெட் தாது மற்றும் கடல் உணவு உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படும் எனவும் அதுமட்டுமல்லாமல் வங்கிகள், வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு செயல்பாடு ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படும் எனவும் வடகொரியாவின் வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடகொரியா பற்றி அமெரிக்காவின் Clarion என்ற அமைப்பு பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

அதில், நாங்கள் தீவிரவாதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தீவிரவாதிகளுக்கு வடகொரியா வெடிகுண்டுகள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவைகளை விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை ஈடு கட்டும் வகையில், தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வடகொரியா விற்பனை செய்யலாம் எனவும், தீவிரவாதிகளின் குறி வடகொரியா கிடையாது என்பதால், அவர்களுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.