20 ஆம் திருத்தச் சட்டத்தின் விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (07) எடுத்துக்கொள்ளப்படுமென வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 104 வது விசேட அமர்வு இன்று திங்கட்கிழமை (04.09) ஆரம்பமாகியது.

20 வது திருத்தச் சட்டத்தின் விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாகாண சபைகளின் காலத்தினை நீடிப்பதற்கும், அந்த காலத்தினை குறைப்பதற்கும் பாராளுமன்றம் எத்தனித்துள்ளதுடன், விசேடமாக வட கிழக்கு மாகாணங்களின் உரித்துக்களை சுவீகரித்துக் கொள்வதற்கு முனைகின்றது.

எனவே, 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக உறுப்பினர்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், சபையில் உறுப்பினர்களின் 20 வது திருத்தத்திற்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்தனர்.

சில உறுப்பினர்கள் 20வது திருத்தம் தொடர்பில் விவாதிக்க கால அவகாசம் வேண்டுமென்றும் கோரினர்.

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதன்படி விதிக்கப்படும் தீர்மானத்திற்கு ஏற்ப விவாதிப்பது சிறந்ததென சுட்டிக்காட்டினார்கள்.

இவ்வாறு விவாதம் இடம்பெற்றதை தொடர்ந்து, 7 ஆம் திகதி 20வது திருத்தச் சட்டத்தினை அங்கிகரிப்பதாக இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதாக அவைத் தலைவர் சபையில் அறிவித்தார்.

இது தொடர்பாக ஆளுனருடன் கலந்துரையாடி இறுதி முடிவு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.