சென்னையில் திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.

சில இணையதளங்களில் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக திரைப்பட சங்க நிர்வாகிகள் போலீசாரிடம் புகார்கள் அளித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சில கடைகளில் நடத்தப்படும் சோதனைகளில் திருட்டு வி.சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்து அந்த கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் திரைப்படங்களை வெளியிடுபவர்கள் யார் என்பது தெரியாததால் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதை தடுக்க முடியாத ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்சனையில் பெரிய திருப்பமாக பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின்பேரில் சென்னையை சேர்ந்த கவுரி ஷங்கர் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் எந்த இணையதள நிர்வாகி என்னும் தகவல்களை விசாரணைக்கு பின்னர் தெரிவிக்க உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாடு நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டித்தெரிந்து கொண்டார்.

இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது:

திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக பிரபல இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. போலீஸ் விசாரணைக்கு பின்னர் மற்ற தகவல்கள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.