கமல் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடிக்கிறார். அவரைப்பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சம் கிடையாது. தமிழில் கமல் இயக்கி நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்துவந்தார்.

இந்நிலையில் கமலுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. கமலும் அரசியல் களத்தில் சூடுபறக்க பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சுந்தர்.சி. இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஸ்ருதி. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி வெளிநாட்டில் நடந்தபோது அதிலும் பங்கேற்றார்.

கத்தி சண்டை பயிற்சியும் பெற்றார். இதில் ஜெயம் ரவி, ஆர்யா ஹீரோக்களாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வந்தநிலையில் திடீரென்று அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார் ஸ்ருதி.

அதன்பிறகு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். சங்கமித்ராவில் இருந்து திடீரென்று விலகியதால் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லையா? அல்லது அவரே புதிய படங்கள் ஏற்காமல் தவிர்க்கிறாரா? அல்லது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு யாரும் வழங்குவதில்லையா? என்று கோலிவுட்டினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது,’ஹீரோயின் வாய்ப்பு வராது என்ற பயமெல்லாம் எனக்கு கிடையாது. நடிப்பு தவிர வேறு துறைகளிலும் நான் சிறப்பாக செயல்படுவேன். என்னைப் பொறுத்தவரை தற்போது புதிய படங்கள் ஏற்காமல் தவிர்த்து வருகிறேன். அதற்கு காரணம் என்னை நானே ரீசார்ஜ் செய்துகொள்ளும் தேவை இருக்கிறது’ என்றார்.