எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களில் முதல்வரும் துணை முதல்வரும் தவறாது கலந்துகொள்கின்றனர்.

18-வது மாவட்டமாக தருமபுரியில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையை முதல்வர் வாசித்து வருகிறார்.

தங்களுக்கு எதிராக தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களை விமர்சிக்கும் வகையில் குட்டிக் கதைகளையும் சொல்லி வருகிறார்.

தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் 18 எம்.எல்.ஏக்களும் சார்ந்த மாவட்டங்களில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் இந்த குட்டிக் கதைகளை கூறுகிறார் முதல்வர் பழனிசாமி.

மற்ற உரைகளைத்தான் பார்த்து படிக்கிறார் என்றால் அந்த கதைகளையும் பார்த்துத்தான் படிக்கிறார் முதல்வர் பழனிசாமி. மற்றதைத்தான் பார்த்து படிக்கிறார் என்றால் கதையையாவது கதை மாதிரி சொல்லலாம் அல்லவா? ஆனால் முதல்வரோ கதையை கதை மாதிரி சொல்லாமல் அதையும் பார்த்தே வாசிக்கிறார். முதல்வர் கூறும்(வாசிக்கும்) கதையை கேட்டால் கதை கேட்கும் நினைப்பே வருவதில்லை.

இதுவரை முதல்வராக இருந்தவர்கள் அனைவரும் பேச்சுத்திறமை மிக்கவர்கள். பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள். அண்ணா, கருணாநிதி ஆகியோர் தங்களது பேச்சாலேயே அனைவரையும் கட்டிப்போட்டனர். அண்ணா, கருணாநிதி அளவிற்கு இல்லையென்றாலும்கூட ஜெயலலிதாவும் பேச்சுத்திறமை மிக்கவர்தான்.

ஆனால் அப்படிப்பட்ட அண்ணா, கருணாநிதி போன்ற பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டவர்கள் அமர்ந்த இருக்கையில் கதையைக் கூட பார்த்துப் படிப்பவர் இருக்கிறாரே? என்று  கிண்டலடிக்கப்படுகிறார் முதல்வர் பழனிசாமி.