உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் பெப்லோ டி கிரீப், இன்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்துள்ளார்.

சிறப்பு அறிக்கையாளர் பெப்லோ டி கிரீப், இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவை சந்தித்தார்.திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் முடிவில் ஆளுநர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும், குறிப்பாக அரசினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் தாம் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், வியாபார அபிவிருத்தி குறிப்பாக வியாபார முயற்சியான்மையாளர்கள் குறித்தும், சிறுபிள்ளைகள் பராமரிப்பு, மீள்குடியேற்றம் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக அனாதரவாக்கப்பட்ட குடும்பங்களை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாக மத்திய அரசினாலும் மாகாண சபையினாலும் இதுவரைகாலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.