நாட்டையே உலுக்கிய உத்தரப் பிரதேச சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அலகாபாத்  நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2008ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார் என்ற 14 வயது சிறுமி, வீட்டின் வேலையாள் ஹேம்ராஜ் (45) இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

அவர்களை ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நூபுர் தல்வார் இருவரும் சேர்ந்து ஹாக்கி மட்டையால் அடித்தே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.  இதை அடுத்து இந்த இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ., விசாரித்தது.

சிபிஐ., நடத்திய விசாரணையில், ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நூபுர் தல்வார் ஆகியோர் இந்தக் கொலையில்  ஈடுபட்டதாகக் கூறி, சிபிஐ., சிறப்பு நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.

இதை அடுத்து இருவரும் காசியாபாத்தில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் ஆருஷியின் பெற்றோர்.

இந்த வழக்கு விசாரணையில், சாட்சியங்கள் அனைவரும் விசாரிக்கப்பட்ட நிலையில் அக்.12 நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் இருவரும் நிரபராதிகள் எனவும், அவர்கள் கொலை செய்யவில்லை என்றும் கூறி, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

இந்தக் கொலைக்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், சந்தேகத்தின் பலனை இருவருக்கும் அளித்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் கூறியது.

தில்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் வசித்தவர்கள் பல் மருத்துவர்களான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் தம்பதி. இவர்களின் மகள் ஆருஷி. 14 வயதே ஆன இந்தச் சிறுமி, 2008, மே-16ஆம் தேதி வீட்டின் படுக்கை அறையில், கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.

இது குறித்து தல்வார் தம்பதியர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணையில், அந்த வீட்டின் வேலையாள் ஹேமராஜ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.

ஆனால், நேபாள நாட்டவரான ஹேமராஜ், மறு நாள் காலை  அதே வீட்டின் மாடிப் பகுதியில் சடலமாகக் கிடந்தார். இவர்கள் இருவரையும் கௌரவக் கொலை செய்தது  அந்தத் தம்பதிதான் என்றும், நெருங்கி பழகியவர்களின் செயலாக இது இருக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் வெளியாகின.

ஆருஷி பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் இது கௌரவக் கொலை எனக் கருதி, தல்வார் தம்பதியிடம் விசாரித்த போலீஸார்,  மே 23ல் ராஜேஷ் தல்வாரைக் கைது செய்தனர். பின் எழுந்த சர்ச்சைகளால், இந்த வழக்கு  சிபிஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.

தல்வார் தம்பதியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. பின், சிபிஐ., விசாரணை அறிக்கையை காசியாபாத் சிபிஐ., நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், தல்வார் வீட்டில் வேலை செய்தவர்கள் மீது சந்தேகம் இல்லை; அதே நேரத்தில் தல்வார் தம்பதி மீது சந்தேகம் உள்ளது.

ஆனால், அக்குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்தது.

இதன் பின் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது. தங்கள் மீது பதிவு செய்த குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி தல்வார் தம்பதியர் தாக்கல் செய்த மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டும் அடுத்தடுத்து ரத்து செய்தன.

இதனிடையே 2012ல் நூபுர் தல்வாரும் கைது செய்யப்பட்டார். 2013 நவ.26ல் இருவருக்கும் ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தல்வார் தம்பதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இந்த முறையீட்டு மனு மீதான தீர்ப்பில்தான்,  தல்வார் தம்பதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தான் கொலைகளை செய்தனர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.