ஸ்டோக்ஸ் வராவிட்டால் ஆஷல் தொடரை அவுஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என அந்த அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார்.

வருகிற 28-ந்திகதி அவுஸ்ரேலியாவுக்கு புறப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரும், துணை கப்டனுமான பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய விவகாரத்தில் காவல் துறை விசாரணையில் சிக்கியுள்ளார்.

இதனால் அவர் இங்கிலாந்து அணியில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆஷஸ் போட்டியில் அவர் ஆடுவாரா? இல்லையா? என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் இங்கிலாந்து அணியால் ஆஷஸ் கோப்பையை வெல்ல முடியாது என்று அவுஸ்ரேலிய முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘பென் ஸ்டோக்ஸ் அவுஸ்ரேலியாவுக்கு வராவிட்டால், அவர்களால் ஆஷஸ் தொடரில் வெல்ல முடியும் என்று நான் கருதவில்லை. ஆனால் இத்தகைய சர்ச்சையில் அவுஸ்ரேலிய வீரர் ஒருவர் சிக்கியிருந்தால் நிச்சயம் அணிக்கு தேர்வு செய்திருக்கமாட்டோம்.

வீரர்கள் பொது இடங்களில் இது மாதிரி நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, விளையாட்டின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். ஆஷஸ் தொடரில் ஸ்டோக்சை விளையாட வைக்க வேண்டும் என்பதில் இங்கிலாந்து தேர்வாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அவர் தான் இப்போது அந்த அணியின் சிறந்த வீரர். ஆனால் அவர் இங்கு வந்து விளையாடினால் அது உண்மையிலேயே அவமானகரமானதாக இருக்கும். பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம். 3-1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை வெல்வோம் என்று நினைக்கிறேன்’ என்றார்.