வடக்கில் மலேரியா பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையிலான குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மலேரியா நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையினை ஒரு அவசரகால நடவடிக்கை போன்றே சுகாதார அமைச்சினால் அனுகப்படுகின்றது. ஆரம்பத்திலே மன்னாரின் போசாலை, தலைமன்னார் பகுதிகளில் மலேரியாவினை பரப்பும் அனோபிலிஸ் ஸ்ரபக்சி என்ற நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்நுளம்பு வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டமையானது இவை பரவுகின்றது என்பதையே காட்டுகின்றது. இதனால் இதை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையினையும், மக்களிற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் செய்வதற்கு எமது மாகாண சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அத்தோடு சென்ற வாரம் மத்திய சுகாதார அமைச்சில் இருந்து இது தொடர்பான நிபுணர்கள் அடங்கிய குழுவும் வடமாகாணத்தை சேர்ந்த இத்துறை சார்ந்தவர்களும் நானும் இணைந்து ஒரு கருத்தமர்வினை மேற்கொண்டிருந்தோம்.

இதில் இந்நுளம்பின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடி உரிய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய வேலைத்திட்டங்களை குழுவாக ஆரம்பித்துள்ளனர்.

இதில் விசேடமாக மலேரியா கட்டுப்பாட்டு இயக்கம் முக்கிய பங்குவகிப்பதுடன், அதனுடன் சேர்ந்து ஒவ்வொரு பிரதேச பிரிவுகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் இணைந்து இதனை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தினை செய்கின்றனர்.

இதுதவிர, சுகாதரா தொண்டர்களின் நியமனம் என்பது நீண்ட கால பிரச்சனை என்பது உண்மை. 826 சுகாதார தொண்டரகளும் ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட 127 ஆண் சுகாதார உதவியாளர்களும் எங்களுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.

இவர்களுடைய வேலையினை நிரந்தரமாக்குவது தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இருந்தே பலர் இது தொடர்பான நடவடிக்கையினை எடுத்திருக்கிறார்கள்.

ஒருமுறை ஜனாதிபதியால் கூட இவர்களின் நியமனம் தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் இதற்கான நடவடிக்கையினை எடுத்து பதவிவெற்றிடங்களை தீர்மானித்து இவர்களினை நிரந்தரமாக்குவது தொடர்பான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டிருந்தார்.

ஆனால் பதவி வெற்றிடங்களை தீர்மானிக்கின்ற முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணி ஒரு இழுபறியாகவே இன்னும் இருக்கின்றது.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தமது பதவி வெற்றிடங்களை மீள் பரிசோதனை செய்து அதனை எங்களிற்கு அறிவித்து நியமனங்களிற்குரிய அதிகாரங்களையும் அவ் ஊழியர்களிற்குரிய சம்பளங்கள் போன்ற நிதி விடயங்களையும் இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டவரப்பட்டு நிதி ஒதுக்கீட்டில் அது கருத்தில் கொள்ளப்படுமாயின், நாங்கள் நியமனங்களை வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படுத்தாமல் அடுத்தவருட ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட தொண்டர்களிற்கு நியமனம் வழங்கமுடியும்.

என்றாலும் அதற்கு முன் மீண்டு நானும் வடமாகாண முதலமைச்சரும் இவ்வருட பாராளுமன்ற நிதி ஒதுக்கீடு சம்மந்தமான விவாதத்திற்கு முன் சம்மந்தப்பட்ட அமைச்சிடம் கதைப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.

எந்த திட்டமாக இருந்தாலும் அது மக்கள் நலன் சார்ந்த திட்டமாக இருந்தால் அதனை ஆரம்பித்தது போலவே முடித்து வைக்கப்பட வேண்டிய தேவையும் எமக்குள்ளது. முன்பு சுகாதார அமைச்சினால் வடமாகாண மக்களின் சுகாதார நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்குமானால் எந்த இடையூறும் இன்றி முன்னெடுக்கப்படும். அதேவேளை புதிய திட்டங்கள் மக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அவையும் ஆரம்பித்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை தொடர்பான இக்கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசா, வவுனியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசா, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர்.