தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”வடக்கு மக்கள் தொடர்பாக தெற்கிலும், தெற்கு மக்கள் தொடர்பில் வடக்கிலும் ஒரு தவறான கண்ணோட்டமே காணப்படுகிறது. சிலர் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மகாநாயகக்க தேரர்களுக்கும் தவறான கருத்துக்களை கூறி குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர்.

தற்போதைய அரசியலமைப்பானது சர்வதேசத்தின் தேவைக்காக ஏற்படுத்தப்படுகின்றதென கூறுகின்றனர். அப்படியாயின் அன்று பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, இவர்கள் சர்வதேச சூழ்ச்சியிலா சிக்கியிருந்தனர்?

இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட சர்வதேச சூழ்ச்சியா காரணம்? பிரபாரனும் விடுதலைப் புலிகளும் உருவாக சர்வதேச சூழ்ச்சியா காரணம்? சரியான நேரத்தில் சரியான தீர்வை பெறத் தவறியமையே காரணம்.

இவற்றை உணர்ந்த நாம், புதிய அரசியல் யாப்பின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டில் சகவாழ்வு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவோம்.

அதற்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார். மக்களின் சகல எதிர்பார்ப்புகளுடனும் கூடிய நல்லாட்சி விரைவில் மலரும்” என்றார்.