சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு கடந்த அக்டோபர் 18-ஆம் தேதியுடன் பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் வீரப்பனுக்குப் பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் பற்றிய கதைகள் பயன் தராது என்பதால் அந்த அரசியல் குட்டையை தமது புத்தகத்தில் கிளற விரும்பவில்லை என்று பிபிசி தமிழுக்கு ஓய்வு பெற்ற ஐபிஸ் உயரதிகாரியான கே.விஜய்குமார் பேட்டியளித்துள்ளார்.

“வீரப்பன் – சேசிங் தி ப்ரிகாண்ட்” என்ற பெயரில் அவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட புத்தகத்தில் இடம்பெறாத பல விஷயங்கள் குறித்தும் தேடுதல் வேட்டையின்போது தமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் குறித்தும் பிபிசி தமிழிடம் மனம் திறந்து பேசினார் விஜய்குமார்.

“காவல்துறை மாயாஜால நிபுணரின் உத்தி போல சாதாரணமாக எதிரிகளை வீழ்த்தி விடும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு.

காவல்துறையிடம் பல காலம் சிக்காமல் தண்ணீர் காட்டியதால்தான் வீரப்பன் என்பவர் மிகப் பெரிய நபர் என்பது போன்ற பிரமை மக்களிடையே நிலவி வந்தது. அதுமட்டுமின்றி, தாம் மறைந்து வாழ்ந்த பகுதிகளில் வசிக்கும் சிலருக்கு உதவி செய்து வந்ததால், அவருக்கு உள்ளூர்வாசிகளின் ஆதரவு இருந்தது.

1997 முதல் 1999-ஆம் ஆண்டுகளில் பார்த்தீர்களேயானால், தனது ஐந்து பவுன் சங்கிலியைக் கூட வீரப்பன் அடகு வைக்கும் நிலை இருந்தது. அந்த மோசமான நிலையில் வீரப்பன் சரண் அடைவதற்கான கொள்கையை செயல்படுத்த அரசு முன்வந்தபோதும், அதை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு அமையவில்லை.

வீரப்பனும் தமிழும்

அத்தகைய சூழலில் “தமிழ்” என்ற பெயரை வைத்துக் கொண்ட ஒரு இயக்கம் இணையதளம் ஒன்றின் மூலம் மிகப் பிரபலமானது. அந்த இயக்கத்தில் தானும் பங்கேற்பதாகக் கூறி வீரப்பன் செயல்படத் தொடங்கினார்.

வீரப்பனால் எந்த அளவுக்கு தமிழ் மொழியைப் பேச முடியும் அல்லது தமிழ் மீது அவருக்கு மிகப் பெரிய தாக்கம் இருந்ததா என்பது பற்றிய தர்க்கங்களுக்குள் எல்லாம் இப்போது நான் செல்ல விரும்பவில்லை.