நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே,  அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவருக்குப் பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை என்று, சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக சபாநாயகரிடமும், சிவசக்தி அனந்தன் முறைப்பாடு செய்திருந்தார்.

அதேவேளை, தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளையே துண்டித்துக் கொள்ளவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தமது கட்சி தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் என்றும், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் இடம்பெற்றது.

இதில், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் மாத்திரமே பங்கேற்றிருந்தன. ஈபிஆர்எல்எவ் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.