சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி நீளமான மீன்பிடிப் படகு ஒன்று, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மரைன் காவல்படையினரால் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஒத்ததலை என்ற கடற்கரைப் பகுதியில் இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

18 அடி நீளம் கொண்ட கண்ணாடியிழையிலான இந்த மீ்ன்பிடிப் படகில், மீன்பிடி வலைகள் இருந்தன. எனினும், இயந்திரம் இருக்கவில்லை.

இந்த மீன்பிடி படகு மன்னாரில் பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்தவாரம் தலைமன்னாரில் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போனதாக முறையிடப்பட்டதாகவும், இது அந்தப் படகாக இருக்கலாம் என்றும் தமிழ்நாடு காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.