கேரளாவை சேர்ந்த 24 வயதான ஹாதியா ஜஹான் தான் மணம் புரிந்து கொண்டவரை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததுடன் அவரை “வீட்டுக் காவலிலும்” அடைத்தனர்.

சமூகம் பல சீர்திருத்தங்களை சந்தித்த பிறகும், கலப்பு மணத்துக்கு மதம் மற்றும் சாதி தடையாகப் பார்க்கப்படுகிறதா?

சாதி, மதத்தை தாண்டி, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முடிவை பெற்றோர் திணிக்கிறார்களா? என்று பிபிசி தமிழின் ‘வாதம் விவாதம்’ பகுதியில் நேயர்களிடம் கருத்துக்கள் தெரிவிக்க கேட்டிருந்தோம்.

நேயர்களின் பதிலை தொகுத்து வழங்குகிறோம்.

ஃபேஸ்புக் நேயர் மஹே இந்தரன், “இந்துவும் இஸ்லாமியரும் காதல் திருமணம் செய்ய விரும்பினால் இந்துவானவர் தனது மதத்தை துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்தான் திருமணம் செய்வர். இஸ்லாமியர் எவரும் தனது மதத்தை துறந்து காதலுக்காக இந்துவாக மாறமாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

சீத்தாராமன் கோவிந்த் ராஜூ கொடுக்கும் ஆலோசனை சற்று வித்தியாசமானது.

“மதம் மாறி காதல் திருமணம் செய்பவர்களுக்கு

உதாரணம் ஹிந்து + இஸ்லாம் திருமணம் செய்தால், முதலில் அவர் அவர் மதத்தை விட்டு மற்றவர் மதத்திற்கு மாற வேண்டும் பிறக்கும் குழந்தை புத்தமதம் அல்லது கிறிஸ்துவம் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மதமும், சாதியும் பெண்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதை ஆமோதிக்கிறார் பாலாஜி கே.ஜே. ”மதம், சாதி இன்றளவும் இந்தியாவில் பெண்ணின் சுதந்திரத்திற்கும், வாழ்வியலுக்கும் தடையாக இருப்பது உண்மை”.

மோகன் ராஜ் லா என்ற நேயர், “பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணம் தான் நன்மை கிடைக்கும். காதல் என்ற பெயரில் தான் தோன்றி தனமாக செய்யும் திருமணம் விரைவில் உங்களை கொல்லும்” என்கிறார்.

“பிள்ளைகள் வளர்ந்த பின் பெற்றோருக்கு அவர்கள் மீது உள்ள உரிமையை இழந்து விடுகிறார்கள்” என்று கூறுகிறார் சரோஜா பாலசுப்பிரமணியம்.

“இன்னைக்கி நாட்டுமாடு பாரம்பரிய நெல்விதைகள் பத்தி பேசுறோம் மீட்டெடுக்கிறோம் அதே போலத்தான் இதுவும் ஒருவகையில சரி மற்றொருவகையில தவறு,” என்கிறர் ரவி சந்திரன்.

உமர் முக்தர் என்ற ஃபேஸ்புக் நேயர் “சாதி,மதம் மாறி திருமணம் செய்து கொள்வதை சில இந்திய பெற்றோர்களைத் தவிர பலர் கடுமையாக எதிர்க்கின்றனர், காரணம் அவர்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் சாதி,மதக் கோட்பாடுகள், அதிலிருந்து ஒரு போதும் அவர்கள் வெளியே வர விரும்புவதில்லை, வருவதற்கு விரும்பினாலும் அவர்களை சுற்றியிருக்கும் அதே சாதி,மதத்தினாரால் அவர்கள் நெருக்கடிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளாக்கபட்டு தடுத்து நிறுத்தப்படுகிறார்கள், இது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடந்து வரக்கூடிய ஒன்று, கலப்பு திருமணம் என்பது இங்கே எளிதானதல்ல அது சாதியையும், மத்தையும் சார்ந்திருப்பதால் பல சர்ச்சைகளை உண்டாக்குகிறது, பெரும்பாலும் அரசியலாக்கப்படுகிறது.

குறிப்பாக வேறு மதத்தில் இருந்து முஸ்லீமாக மாறி திருமணம் செய்து கொள்வதை பெற்றோர்களையும் தான்டி சர்ச்சைக்குள்ளாக்குவது அரசியல் தான். மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கெதிரான பரப்புரைகளை ஆதரிக்கும், வளர்க்கும் அரசாங்கமும் இதற்குக் காரணமாகிறது‘ என்று தெரிவித்திருக்கிறார்.

இனி டுவிட்டர் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை பார்ப்போம்.

ஹாதியா திருமணம் மிகவும் வேகமாக நடைபெற்ற திருமணம் என்பது பி. சந்திரசேகரனின் கருத்தாக உள்ளது.

தூக்கி வளர்த்த பெற்றோர் திருமணத்திற்கு வில்லன்களா? என்று கேள்வி எழுப்புகிறார் மணிகண்டன்.என்.

நல்ல வாழ்க்கையைத் தர பெற்றோர் எடுக்கும் முயற்சி எப்படி திணிப்பாகும்? என்பது தருமன் சுந்தரத்தின் கருத்து.

சாதி மதத்தை அழிக்க அரசும், மக்களும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்று செந்தில் எம் ராபர்ட் கூறுகிறார்.