யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

முதற்கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளில் ஒன்றான சாவகச்சேரி நகர சபைக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சில நாட்களுக்கு முன்னதாக கட்டுப்பணம் செலுத்தியிருந்தது.

இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் இடம்பெற்றுள்ள, யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய 16 உள்ளூராட்சி சபைகளுக்கும் போட்டியிடுவதற்கு தமிழ் காங்கிரஸ் சார்பில், கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஏற்கனவே ஈபிடிபி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. தற்போது, தமிழ்க் காங்கிரசும் எல்லா சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன சில அமைப்புகளுடன் இணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

jaffna-districtயாழ்.மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகள்   

 1. யாழ்ப்பாண மாநகர சபை
 2. பருத்தித்துறை நகர சபை
 3. வல்வெட்டித்துறை நகர சபை
 4. சாவகச்சேரி நகர சபை
 5. தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை
 6. நெடுந்தீவு பிரதேச சபை
 7. வேலணை பிரதேச சபை
 8. வலி.மேற்கு பிரதேச சபை
 9. வலி.வடக்கு பிரதேச சபை
 10. வலி.தெற்குமேற்கு பிரதேச சபை
 11. வலி.கிழக்கு பிரதேச சபை
 12. வலி.தெற்கு பிரதேச சபை
 13. பருத்தித்துறை பிரதேச சபை
 14. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
 15. சாவகச்சேரி பிரதேச சபை
 16. நல்லூர் பிரதேச சபை
 17. காரைநகர் பிரதேச சபை