இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக பதவி வகித்த அண்ணாமலை வரதராஜ பெருமாள் இந்திய புலனாய்வு அமைப்பான றோ அமைப்பின் பிரதிநிதி என சிங்கள பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

வரதராஜ பெருமாள் கடந்த 1988ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி முதல் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வடக்கு, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பதவி வகித்தார்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் நாட்டில் இருந்து தப்பிச் சென்ற பெருமாள் இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் வசித்து வந்தார்.

பல மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்த பெருமாள், திருகோணமலையில் தங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். சுற்றுலா வீசா அனுமதியில் வந்த அவர் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சம்பந்தப்பட்டுள்ளார்.

வரதராஜ பெருமாள் வடக்கு, கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனித் தமிழீழத்தை பிரகடனப்படுத்தினார். இது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது.

வரதராஜ பெருமாள் நாடு திரும்பிய நிலையில் அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், அவர் மீண்டும் வடக்கில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு பின்னர் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ அமைப்பு இருக்கின்றது என்பது தெளிவானது.

வரதராஜ பெருமாள் ஒரு பிரிவினைவாதி என்பதால், வடக்கில் உள்ள பிரிவினைவாதிகளுடன் அவர் இணைந்து கொண்டால் பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதே இங்குள்ள மிகப் பெரிய பிரச்சினை.

நாட்டின் அரசியல்வாதிகள் தென் பகுதி மக்களை மகிழ்விக்க இனிப்பான கதைகளை கூறினாலும் வடக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்பட போகும் ஆபத்தான நிலைமைக்கான அறிகுறிகள்.

அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து குரல் கொடுத்தாலும் இலங்கை என்ற நாடு இருக்கவில்லை என்றும் ஈழம் என்ற நாடே இருந்தது என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

மேலும் டெலோ, புளெட், ஈபிஆர்எல்எப் ஆகிய அமைப்புகள் அன்று றோ அமைப்புடன் செயற்பட்ட அமைப்புகள் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனியான கூட்டணியை ஏற்படுத்தும் போது வரதராஜ பெருமாள் களத்திற்கு வருகிறார்.

இதன் மூலம் றோ அமைப்பு வடக்கில் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகியுள்ளன. சித்தார்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,ஸ்ரீகாந்தா வெறுமனே தனியான கூட்டணியை ஏற்படுத்தவில்லை.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது.

இதனை தவிர இந்தியா வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எனக்கூறி நிதி வழங்கியுள்ளது.

மேலும் பலாலி விமான நிலையத்தை பிரதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது. இந்தியாவின் இந்த செயற்பாடுகளை நாட்டின் அரசியல் இயந்திரம் இதுவரை புரிந்துக்கொள்ளவில்லை.

இந்தியாவின் றோ அமைப்புக்கு புலனாய்வு தகவல்களை வழங்கும் சிங்களவர்களும் தமிழர்களும் உள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்தியா மாகாண சபைத் தேர்தலில் தலையிடுவது இலங்கை மீதுள்ள அன்பு காரணமாக அல்ல.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்தியா மிகவும் தந்திரமான முறையில் ஹம்பாந்தோட்டையில் துணை தூதரகம் ஒன்றை அமைத்துக்கொண்டது.

இந்த துணை தூதரகத்தில் மேற்கொள்ளப்படும் இரகசியமான செயற்பாடுக்ள என்ன?. இந்திய துணை தூதரகம் யாழ்ப்பாணத்திலும் இயங்குகிறது.

இதனால், இந்தியா இலங்கையின் அரசியலில் தலையிடவில்லை என்று கூற முடியுமா?. ஒரு புறம் திருகோணமலை துறைமுகம் மீது கண் வைத்திருக்கும் இந்தியா, தெற்கில் ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தையும் குறி வைத்துள்ளது.

அத்துடன் இந்தியா, திருகோணமலை சீனன் குடாவில் உள்ள எண்ணெய் தாங்கிகள் மீது கண் வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா, இலங்கை சம்பந்தமாக கையாளும் அரசியல் செயற்பாடுகள் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த சகல விடயங்களுக்கு மத்தியில் வரதராஜ பெருமாள் மீண்டும் அரசியல் களத்திற்கு நேரடியாக வந்துள்ளதன் யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது என அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிட்டுள்ளார்.