ஈராக் நாட்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்துள்ளார்.

இதனால் ஈராக்கின் அனைத்து பகுதிகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஐ.எஸ் ஆட்சி செய்து வந்தனர்.

இதனால் கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்த ஈராக் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்க கூட்டுப்படைகளின் உதவியுடன் ஒவ்வொரு பகுதியாக மீட்டது.

இந்த நிலையில் ஐ.எஸ் வசம் இருக்கும் கடைசி நகரமான தல் அபர் பகுதியை மீட்க தாக்குதல் நடத்துமாறு ஈராக் ராணுவத்துக்கு அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி கடந்த ஆகஸ்ட் 20-ம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, மோசூல் நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தல் அபர் நகருக்குள் அமெரிக்க கூட்டுப்படைகள் புகுந்து மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து அந்த நகரமும் ராணுவத்திடம் வீழந்தது.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து ஈராக் நாட்டை முழுமையாக மீட்டு விட்டதாக ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி இன்று அறிவித்துள்ளார். இதே கருத்தை ராணுவ முப்படை தளபதிகளும் இன்று வெளியிட்டுள்ளனர்.