ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆணையத்தின் பணி காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பணி நிறைவு பெறாததால், மேலும் கால நீட்டிப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் 6 மாத காலத்துக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் எழுப்பினர்.

ஓபிஎஸ் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்.25-ல் தமிழக அரசு வெளியிட்டது. விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். இரண்டு மாத காலத்தில் விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ஜெயலலிதா விசாரணை ஆணையத்திற்கான அலுவலகத்தில் நவம்பர் 22-ம் தேதி விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார். ஜெ.தீபாவின் கணவர் மாதவன், திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன், ஜெ. தீபா, தீபக், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் , மருத்துவர் தினேஷ் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஆயிரக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் , ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் விசாரணையை இரண்டு மாத காலத்திற்குள் முடிப்பது இயலாத காரியம் என்று கூறப்பட்டது. விசாரணை முழுமை பெறாத நிலையில் விசாரணை ஆணையத்தின் காலம் வரும் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.

சசிகலா, அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி, ப்ரிதா ரெட்டி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணை தொடர்ந்து நடக்க ஏதுவாக கால நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் ஆறு மாதகாலம் கால நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜூன் 25 வரை விசாரணை ஆணையம் செயல்படும்