தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சகோதரன்  வேலுப்பிள்ளை மனோகரனுடனான செவ்வி. 2

புதுமாத்தளன் சம்பவங்கள் நடைபெற்றபோது அவர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா..?

Related image

தொடர்பு கொள்ளவில்லை.. குடும்பத்தின் நன்மை தீமைகளை பேசியவர்.. சார்லஸ் இறந்தாக காண்பிக்கப்பட்டபோது மட்டும் ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதுவும் குடும்ப நன்மை தீமைகளுக்குள் வரும்தானே.. மேலும் அப்போது நடேசன் பலருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. அவர் மூலமாகவேனும்; அந்தச் செய்தியை ஏன் என்னிடம் கூறவில்லை. ஆம்.. அப்படியான நிகழ்வுகள் நடந்திருந்தால் குறைந்தபட்சம் நடேசன் மூலமாவது எனக்கு சொல்லியிருப்பார். மேலும் அப்போது எனது தந்தை அங்கே இருந்தார்.. அவராவது அந்தச் செய்தியை கண்டிப்பாக எனக்குச் சொல்லியிருப்பார். யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை, எல்லோரின் கைகளிலும் தொலைபேசி இருந்தது, அது செயற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. பிரபாகரனின் மனைவி எம்முடன் தொடர்பில் இருந்தவர்.. அவர் கூட போன் செய்யவில்லை… ஏன் .. நன்றாக யோசித்துப் பாருங்கள்.. எல்லாவற்றையும் யோசித்தால் எங்கோ ஓர் இனம்புரியாத இருள் விளக்கமின்றி இருப்பது தெரிகிறதல்லவா?

உண்மைதான்… சரி .. உங்கள் தம்பி பிரபாகரன் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்.. நீச்சல் தொட்டியில் குளிக்கிறார் என்று படங்கள் வெளியாகின அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்.. ?

உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன்.. அவர் தமிழழேந்தியிடமிருந்து மாதச் சம்பளம் வரவில்லை என்பதால் மகனுக்கு சிறிய விளையாட்டு சாமானையே வாங்கிக் கொடுக்க முடியாது யோசித்தவர். எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். பொதுமக்களின் சொத்தை சுய தேவைக்காக பாவிக்கும் பழக்கம் தெரியாதவர்.

இரத்தம் சிந்திய மாவீரருக்காக தேடிய பணத்தை தொடுமளவிற்கு இதயமற்றவர்கள் உலகில் இருப்பார்கள் என்று கருதும் தகவல் அவர் மூளையில் இல்லவே இல்லை. எனவே பொதுப்பணத்தில் ஆடம்பர வாழ்வு என்ற பேச்சுக்கே அவர் வாழ்வில் இடமில்லை. ஆனால் பேச்சு வார்த்தை நடைபெற்ற காலத்தில் அவரைப் பார்க்க குடும்பத்தினர் இங்கிருந்து சென்றார்கள். அவர்கள் டென்மார்க்கில் பிளாஸ்டிக் பையில் செய்யப்பட்ட மிகமிக விலை குறைந்த 100 குறோணர் விலையுள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கொண்டு சென்று கொடுத்தார்கள்.

அதுதான் சிறீலங்கா அரசு பிரச்சாரம் செய்த ஆடம்பர வாழ்வு. அதைத் தான் நம் தமிழ் உறவுகளும் இணையங்களில் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். ஒரு தூய போராளியின் வாழ்விற்கும் தனது வாழ்விற்கும் இடையில் யாதொரு வேறுபாட்டையும் அவர் வைக்கவில்லை.அந்தப் பிரச்சாரங்களை எல்லாம் இன்று பிரபாகரன் முறியடித்துவிட்டார்.

சரி.. பிரபாகரன் இருக்கிறார்.. அவர் தற்போது வெளிப்படவில்லை.. என்று வைத்துக் கொள்வோம்.. இந்த நிலையில் யார் பேச்சைக் கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தேன்றிவிட்டார்களே ?

பிரபாகரன் தனக்குப் பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள். அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்றும் கூறியிருக்க மாட்டார்கள். இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.. ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்களே என்பது தெளிவு. பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் வாக்கெடுப்பில் உள்ளதே..?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது அன்றைய தமிழர் கூட்டணியினரால் எழுதப்பட்ட ஒரு காகிதத் தீர்மானம். அதனடிப்படையில் தாயகத்தில் ஒரு தேர்தலும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்ததைவிட சிறந்த தமிழீழ அரசை பிரபாகரன் உருவாக்கி முடித்திருந்தார்.

கடற்படை, ஆகாயப்படை, போலீஸ்பிரிவு, வங்கித்துறை, தரைப்படை, தமிழீழ நிர்வாகம் என்று சட்டம் – நீதி- நிர்வாகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சட்டவாட்சியை வள்ளுவர் காட்டிய நெறியோடு வரையறை செய்து வழங்கிவிட்டார். உலகிற்கே ஒரு முன்மாதிரியான தேசத்தை உருவாக்கி சாதனையும் படைத்துவிட்டார்.

அதைத்தான் நீங்கள் எல்லோரும் வன்னியில் கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். தென்னை மரத்தில் ஏறி வட்டுவரை சென்றுவிட்ட ஒருவன் அதிலிருந்து கீழே இறங்கி என்னால் தென்னையின் வட்டுக்கொள்ள முடியுமா என்று கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் எப்படியிருக்கும்? இப்படியொரு கேள்விக்கு பதில் ஒன்று தேவையா? இதற்கு பதில் கூறத்தேவையில்லை. சில கேள்விகளுக்கு மேல் வைக்கப்படும் கேள்விகளே அதற்குரிய பதில்களாக அமையும் இதுவும் அந்தவகை சார்ந்ததே.

அப்படியானால் இப்போது நாடுகடந்த தமழீழஅரசு என்ற இன்னொன்று வருகிறது.. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் ?

நமது நாட்டில் இப்போது உங்கள் வீட்டை நீங்களே போய் பார்க்க வேண்டுமானால் உங்கள் வீட்டுக்கான உறுதியைக் கொண்டு போக வேண்டும். ஆளில்லாமல் கிடக்கும் உங்கள் வீட்டை நீங்களே பார்க்க உறுதி வேண்டும்.. மறந்துவிடாதீர்கள் வாழ்வதற்கல்ல ஒரு தடவை பார்ப்பதற்கு.. உறுதி இல்லாவிட்டால் உங்களை உங்கள் வீட்டிற்கே இராணுவம் அனுமதிக்க முடியாத நிலை இருக்கிறது.

பிரபாகரன் வாழ்ந்த வீட்டை சிங்கள மக்கள் பார்ப்பதால் அது இடிக்கப்படுகிறது.. அதற்கும் உறுதி வேண்டுமோ என்னவோ.. (சிரிப்பு) நமக்கு உரிமை எங்கே இருக்க வேண்டும் எம் தாயகத்தில்.. வெளிநாடுகளில் வாழ்வோருக்கு சட்டரீதியான வாழ்வியல் உரிமை இருக்கிறது.. ஆனால் நமது தாயகத்தில் சொந்த வீட்டுக்கே போக உரிமையற்று மக்கள் முகாமில் இருக்கிறார்கள். இப்படியான யதார்த்த நிலை இருக்கிறது.. இந்நிலையில் நாடுகடந்த அரசால் சொந்த வீடு கடந்து போவதற்காவது ஓர் உரிமையை பெற்றுத்தர முடியுமா? பிரபாகரன் வெளிநாட்டில் ஓர் அரசை அமைக்கவா போராடினார்..

நாடுகடந்த அரசுபற்றிய கேள்விக்கும் பதிலாக கேள்விகளையே வைக்க முடியும் என்பதை நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள்.. இவைகள் இரண்டும் பிரபாகரன் சொன்ன பாதைகளா என்பதை பிரபாகரன் நேசித்த மக்கள் தீர்மானிப்பார்கள். நாம் பதில் கூற வேண்டிய தேவை இல்லை. அப்படியானால்

இன்றைய நிலையில் என்னதான் செய்வது ?

எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார்.

புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக் கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள்.

இவை அனைத்தும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது.

பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது. காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை.

எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..

சரி இப்படியான குழப்ப நிலை வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே ?

நான்தன் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான் இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன் பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார் பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே..

தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது ஆண்டன் பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்..

இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்..

புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா ?

புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் என்ன ?

ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும் வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்… அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்… அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல் தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின் வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள் போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன்.

இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்.. அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜி கதையின் வெற்றிடத்தில் நிற்கும் மர்மமான உண்மை. பிரபாகரனும் அதே முடிவுரையைத்தான் எழுதியுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் இல்லாமலும் போராடுவார்.. மறுபடியும் வெற்றிடம்.. வெற்றிடத்தில் யார் வருவார்… மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா? இவ்வாறு அவர் பேட்டியளித்துள்ளார்.