நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் என 3 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய தமிழ்ப் படங்களும் இரு தெலுங்குப் படங்களும் வெளிவரவுள்ளன.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகை நயன்தாரா கைப்பட எழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:-

என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும்.

உங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். தீவிரமான அன்பு இன்னும் இருப்பதை நீங்கள் உணர்த்தியுள்ளீர்கள். என் மீதான அன்பினால், வாழ்க்கை அழகானது என்பதை உணர்ந்துள்ளேன். அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பைச் செலுத்தி மற்ற விஷயங்களைக் கடவுளிடம் விட்டுவிட வேண்டும் என்பதையும் நீங்கள் எனக்கு உணர்த்தியுள்ளீர்கள்.

என் மீது நீங்கள் செலுத்தும் அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு – இன்னும் கடுமையாக உழைத்து பொழுதுபோக்குள்ள படங்கள் மட்டுமல்லாமல் அறம் போன்ற அர்த்தமுள்ள படங்களையும் தருவேன். அறம் படத்தின் வெற்றிக்கு ஊடகங்களுக்கும் என் நன்றியைச் செலுத்துகிறேன்.

அன்பினாலும் நேர்மறை விஷயங்களாலும் இந்த வருடம் அருமையாக அமைந்துள்ளது. உங்களால் தான் நான் இந்த இடத்தில் உள்ளேன். உங்கள் நெஞ்சத்தில் எனக்கும் சிறிய இடம் அளித்ததற்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.