போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து 4 நாட்களாக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆங்காங்கே விபத்துகள் நேர்ந்துகொண்டே இருக்கின்றன. இதுசம்மந்தமாக நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் பேசுகையில், போக்குவரத்து பணியாளர்கள் வேலைக்கு திரும்பவிட்டால் துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆனால் அதன் பின்னர் இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து துறையினர் வேலைநிறுத்தத்தினை கைவிட்டுவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து சென்னை எழும்பூரில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட 22 போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.