அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள போம்ஜா கிராமம் ஆசியாவின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.

ராணுவப் பயன்களுக்காக இந்தக் கிராமவாசிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. புதனன்று இந்த கிராமத்துக்கு வந்த முதல்வர் பீமா காண்டு மொத்தம் ரூ.40.8 கோடிக்கான காசோலையை நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக அளித்தார்.

போம்ஜா கிராமத்தில் மொத்தம் 31 குடும்பங்கள் உள்ளன. இந்த நிலம் கையக இழப்பீட்டுத் தொகையினால் கிராமத்தின் இந்தக் குடும்பங்கள் ஒரே நாளில் கோடீஸ்வர குடும்பங்களாக மாறிவிட்டன.

அதிக அளவில் நிலங்களைக் கொடுத்த ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.6.73 கோடி இழப்பீடாகக் கிடைத்துள்ளது. இன்னொரு குடும்பத்துக்கு ரூ.2.45 கோடி கிடைத்தது. மீதமுள்ள 29 குடும்பங்களுக்கும் ரூ.1.09 கோடி இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஒரே நாளில் கிராமமே கோடீஸ்வர கிராமமானது.

இந்த இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுத்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அருணாச்சல பிரதேச முதல்வர் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.