சிரியாவில் நான்காவது நாளாக வான்வழித் தாக்குதல் நடந்து வருகிறது. இதில் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்

இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்புக் குழு, “சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகிலுள்ள கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் இன்று (வியாழக்கிழமை) வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஆறு இடங்களில் அரசுப் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக சிரிய அரசுப் படை தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல் குறித்து ஐ. நா., ”கடந்த வாரம் சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிக மோசமானவையாக பதிவாகியுள்ளன. கடந்த 8 வருடங்களில் இம்மாதிரியான மோசமான தாக்குதலை சிரியாவில் நாங்கள் பார்க்கவில்லை. சிரியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் உள் நாட்டுப் போரில் பசி கொடுமை, வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் இதுவரை 5,00,000 மக்கள் பலியாகியுள்ளனர். இனியும் நாங்கள் சிரியாவில் நடப்பதைக் கண்டு இனி அமைதியாக இருக்கப் போவதில்லை” என கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது