2012ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுதேஷ் நந்திமால் என்பவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மற்றும் அதற்கு ஆலோசனை வழங்கியவர்கள் ஆகியோரை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கான ஆணையீட்டு உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.