கயவர்களினால் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள் கிடைக்க பிரார்த்திப்பதாக மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய ஆயரை வரவேற்கும் நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல கண்ணீருக்கு மத்தியில் கலக்கத்துடனும், பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தனை காலமும் காணாமல் போன உங்களின் உறவுகளை தேடித்திரிந்தும் பல வகையான முயற்சிகளை எடுத்தும் இன்னும் காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையை கண்டு நான் மனம் வருந்துகிறேன்.

கயவர்களினால் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். மன்னார் மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் என்னால் இயன்றவற்றைச் செய்வேன்” என்று தெரிவித்தார்.